Sunday, 12 July 2015

சொந்தமாக வீடு கட்ட வேண்டும், அதை அழகாக அமைக்கவேண்டும்

 சொந்தமாக வீடு கட்ட வேண்டும், அதை அழகாக அமைக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும், நினைக்கின்றனர்.நம் கனவுகள், கற்பனைகள் நிஜமாகி, பலதலைமுறைகளாக நீடித்திருக்கும் வீட்டிற்கு நாம் எந்த அளவுக்கு தரமான பொருட்களை பயன்படுத்துகிறோம் என்பது மிகமுக்கியம். வீடுக்கு உயிர்கொடுக்கும் சிமென்ட், கம்பி, ஜல்லி, மணல், செங்கல் உள்ளிட்ட கட்டுமானப்பொருட்கள் எந்த அளவுக்கு தரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தலைமுறைகளாக வீடு தாங்கியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கட்டுமானத்திற்கு உறுதி, தரம் சேர்ப்பதில் பிரதானமானது சிமென்ட். தரமான சிமென்ட் இல்லாமல், இன்று வானளாவிய கட்டிடங்கள் எழுந்திருக்காது. வீடுகட்டும் நிறுவனம்(பில்டர்ஸ்) என்ன வகையான சிமென்ட்டை பயன்படுத்திறது என்பதை வைத்தே பில்டர்ஸின் தரத்தை கண்டுபிடித்துவிடலாம். வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை பெறவிரும்பும் பில்டர்ஸ் எப்போதும் தரமான சிமென்ட்டை பயன்படுத்துவார்கள். 

சரி, தரமான சிமென்ட்டை எப்படி அடையாளம் காண்பது, அதற்கான அளவு கோல் என்ன, சிமெண்டின் வகைகள் என்ன என்பதை அறிந்துகொண்டால், நம் கனவு இல்லத்தை அழகாக, ஸ்திரமாக, நமது குழந்தைகளுக்காக அமைக்லாம்.

சிமென்ட்டின் வகைகள், தரங்கள்..   

சிமென்ட்டில் மொத்தம் 14 வகைகள் உள்ளன. ஆனால், பெரும்பாலும், வீடுகள், அடுக்குமாடிவீடுகள் ஆகியவற்றுக்கு “ஆர்டினரி போர்ட்லேண்ட் சிமென்ட்” எனும் வகையே பெரும்பாலான பில்டர்களால் பயன்படுத்தப்படுகிறது.     சிமென்ட்களின் தரக்குறியீட்டை வைத்தே, அதன் உறுதித்தன்மை, இறுகும் தன்மை (செட்டிங்), நீடித்து உழைக்கும் தன்மையும் மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில், 33 கிரேடு, 43 கிரேடு, மற்றும் 53 வகை கிரேடு என 3 வகை சிமென்ட் மட்டும் பெரும்பாலும் வீடுகட்ட பயன்படுத்தப்படுகிறது. இந்திய தர நிர்ணய அமைப்பு மூலமே அனைத்து வகை சிமென்ட்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. 

 இதில் 33 கிரேடு “போர்ட் லேண்ட் சிமென்ட்”(ஒ.பி.சி) என்பது சிறிய பணிகள், சாதாரண பூச்சு வேலை போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இவை தற்போது குறைவாகவே புழக்கத்தில் உள்ளன. விலையும் குறைவு.    43 கிரேடு ஒ.பி.சி சிமென்ட் அனைத்து வகை வீடுகள், கட்டிடங்கள் எழுப்ப ஏற்றது. இந்தியாவில் பெரும்பாலும் இத்தகைய சிமென்ட் பயன்படுத்தப்படுகிறது. இது 33 கிரேடு வகையைக் காட்டிலும் தரமானது, பலமானது. இந்த வகை சிமென்ட் மூலம், வீடுகள், கட்டிடங்கள் முழுமை பணி, சுற்றுச்சுவர், வீட்டின்அடித்தளம், வெளிப்பூச்சு, உள்பூச்சு, டைல்ஸ், மார்பில், கிரானைட் ஒட்டுதல், தரைப்பூச்சு போன்ற பணிகளுக்கு மிகச்சிறந்தது.     53 கிரேடு ஒ.பி.சி சிமென்ட் என்பது 33 கிரேடு, 43 கிரேடு சிமென்ட் வகையைக் காட்டிலும் மிகவும் உறுதியானது, தரம்கூடியது.

 இந்த வகை சிமென்ட் அடுக்குமாடி குடியிருப்புகள், உயர்ந்த கட்டிடங்கள், பாலங்கள், உள்ளிட்ட பெரிய வகை கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. வீடுகள், அடுக்குமாடிகள் கட்டுவதற்கு கிரே வண்ணத்தில் சிமென்ட்டும், அழகிய வேலைபாடுகள், கட்டிடத்தின், உள்புற, வெளிப்புறத்தை அழகுபடுத்தும் பணிக்கு வெள்ளை நிற சிமென்ட்டும் பயன்படுத்தப்படுகிறது. 

எது தரமான சிமென்ட்?

சிமென்ட்டில் பலவகைகள் உள்ளதையும், எந்தெந்த கட்டுமானங்களுக்கு எவை பயன்படுத்தப்படும் என்பதைப் பார்த்தோம். ஆனால், வலுவான, நேர்த்தியான வீட்டை அமைக்க, தரமான சிமென்ட்டை எப்படி ஆய்வு செய்து வாங்குவது. நாம் வாங்கும் சிமென்ட் எல்லாம் நல்ல சிமெண்டா, அதை எப்படி தெரிந்துகொள்வது. இதோ சில டிப்ஸ்..   வீடுகட்ட தேவையான சிமென்ட்டை தேர்வு செய்யும் போது, நம்பிக்கையான, பி.ஐ.எஸ் தர சான்றிதழ் பெற்ற நிறுவனத்தின் சிமென்ட்டை தேர்வு செய்வது தரத்தை உறுதிசெய்ய உதவும்.    நாம் தேர்வு செய்யும் நிறுவனத்தின் சிமென்ட் மூட்டை மீது அந்த நிறுவனத்தின் பெயர் முறையாக அச்சிடப்பட்டுள்ளதா, மூட்டையின் வாய் கையால் தைக்கப்படாமல், இயந்திரத்தால் தைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக பார்க்க வேண்டும்.    மூட்டையின் வாய்ப்பகுதியின் தையல் பிரிக்கப்பட்டுள்ளதா, அல்லது கிழிந்திருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். 

 சிமென்ட் உற்பத்தி செய்யப்பட்டு, பேக்கிங் செய்யப்பட்ட தேதி மூட்டையில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அந்த தேதியிலிருந்து 6 வார காலத்திற்குள் இருக்கும் சிமென்ட்டை வாங்குவது பணிகளுக்கு சிறந்தது.     தரமான சிமென்ட்டா என சோதிக்கும் போது, மூட்டையினுள் கைவிட்டு சிமென்ட்டை தொடும்போது, ஒருவித குளிர்ச்சி உணரப்பட வேண்டும். ஒரு கை சிமென்ட்டை அள்ளி ஒருவாளி நீருக்குள் போடும் போது, சிமென்ட் சில நிமிடங்கள் மிதந்து, அதன்பின்பு, கரைய வேண்டும். உடனடியாக நீரில் கரையும் சிமென்ட் ஏதேனும் குறைபாடு இருக்கும்.    சிறிது சிமென்ட்டை எடுத்து அதை பேஸ்ட் போல் குழைத்து ஓர் அட்டை அல்லது பிளேட்டில் சதுரவடிவத்தில் செய்ய வேண்டும். அதை அப்படியே மெதுவாக நீரில் மூழ்கடிக்கும் போது, அந்த வடிவம் கரையக்கூடாது. அதனை வெளியே எடுத்து, 24 மணிநேரம் சென்றபின்பு, அந்த வடிவம் இறுகி கடினமானதாக மாறவேண்டும்.     சிறிதளவு சிமென்ட்டை எடுத்து கைகளில் , விரல் இடுக்கில் தேய்கும்போது மிருதுவாக, கொரகொரப்பு இன்றி இருக்க வேண்டும். சிமென்ட்டை வாங்கியபின்பு காற்று  அதிகம் செல்லாத இடத்தில் அடுக்கிவைத்து பத்திரப்படுத்த வேண்டும்.    மழைக்காலங்களில், சிமென்ட் மூட்டையை பாலிதீன் உறை போட்டு மூட வேண்டும்.

No comments:

Post a Comment